'>

Thursday, September 29, 2011

நானுயர நாடுயரும்


பாட்டு கேட்டுத்தான்
எனக்கு வேட்டு வைக்கின்றாய்

வாவி வெட்டுகையில் பாறை வந்துற்றால்
வெடி வைத்து தகர்த்தற்போல்

செழுமை காரணத்தால் - லட்சியம் மறந்த நெஞ்சம்
பாறையாய் மாறுகையில்
கவியூற்று அடை பட
வேட்டு வைத்தல் முறை

இத்துணை கோடி மா(மை)ந்தர்
இவரில் நான் என்ன கொம்பனோ?

கரையும் நெஞ்சம் கண்டே இமயம் ஒத்ததென்று
குடிபுகுந்தாய் என் நெஞ்சம்

பனியிது பாறையாகிவிட்டால்
ஒரு நொடியேனும் தங்குவையோ

நீ தங்கி இருந்தாலன்றி என் நெஞ்சில் ஒளியேது?
என் பேச்சில் ஞானக்கிளியேது?

நெஞ்சை தகர்த்தே போட்டாலும் - நீ தங்கினால் போதுமடி எனில்
மங்கியதெல்லாம் துலங்கும்

சிவனார் உறவாலே மயான சயனம் விரும்பி
என் மனதை மயானமாக்க முனைந்தாலும் சம்மதமே

நீ தங்கி விடு - என்னை துலங்க விடு

கடமை எனக்குண்டு - கடமையின் பின்னொரு தேசம் தானுண்டு
நானுயர நாடுயரும் - தாய் நாட்டின் பீடுயரும்

வலசை போகாது - மனமிசை தொடர்ந்திடவே
எண்ணிய தாயுள்ளம் தனக்கேதான் தனயன் நானடிமை

யாது செய்ய திருவுளமோ?
என் வாழ்வும் இங்கோர் போர்க்களமோ?

சந்தை வாழ்விது சிந்தை தானறியும்
மந்தையிதனோடு மகவு நான் பயணித்தால்

மந்தையோடு நானும் வெட்டுண்டு சாகவேண்டும்

அகந்தை சூரியனே அஸ்தமித்த வேளையிது
அந்திப்பொழுதே போல் இருள் சூழும் நேரமிது

பிள்ளை மனமென்னும் சந்திரன் உதிக்கவில்லை -
தன் காலை பதிக்கவில்லை

மசமசப்பாய் தெரியுதடி எம்மை விழுங்கவரும் புலிக்கூட்டம்
மந்தை இதுவுக்கோ புல் மீது தான் நாட்டம்

வழி நடத்த போறாது
பழி சுமக்க கூடாது

வழி காட்டி ஒளி கூட்டு
வழி நடத்தும் வகையினிலே

விரித்த கடையிதனை கடைக்கண்ணால் நீ கண்டால்
பாடசாலையாகும்.
அபயம் நீ தந்தால் ஆயுத சாலையாகும்

ஏழ்மை எரிக்க களம் கண்டேன்
அதற்கே என்னை தின்னத்தந்தேன்

புடமிட்டது போன்றே துயனாக்கி
மாய உலகில் திரிய விட்டாய்

மருமம் யாவும் அறியவிட்டாய்
மடமை சுவர்கள் சரிய வைத்தாய்

புதையல் ஏதும் கிட்டவில்லை
புதை சேற்றினின்றே மீண்டிட்டேன்

ஓரிரு நாணயம் கண்ணில் பட்டு
புதையலின் இருப்பை உறுதி செய்ய
பயணம் தொடருது உனை நோக்கி

ஞானச்செல்வமதற்கே கன்னமிட்டு
கொள்ளையிடவே அனுமதிப்பாய்

பின் செல்வம் யாவும் பகிர்ந்தளிக்க பரமேசி நீயும்
வரம் தருவாய்

ஆடவர் பெண்டிர் யாவருமே
அக்கினிக்கிரையாய் ஆனபின்னே

ஆக்கிவைத்த விருந்தெல்லாம்
பகிர்ந்து என்ன லாபமடி
இதை பூட்டி வைத்தல் பாபமடி

என் படைப்புகள் யாவும் அச்சாகி
இணையம் என்ற தேரேறி

எண் திக்கும் பரவி ஈங்கிவர்க்கே புது
சன்னல் பலவும் திறந்திடனும்

மாடை வந்தால் மாற்றம் வரும்
என்றே நானும் காத்திருந்தேன்

காசு பணமே வந்த பின்னும்
மாற்றம் இல்லை என் வாழ்வில்

ஏனோ என் மேல் பகை கொண்டாய்
என் பாடு கண்டு நகைக்கின்றாய்

மாற்றம் காணாது திகைக்கின்றேன்
என் உன்மத்தம் பாட்டில் உரைக்கின்றேன்
மாற்றிடு மாற்றிடு இந்நிலையை
போற்றிடும் வையம் என் கலையை.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

No comments: