'>

Tuesday, January 11, 2011

சனி பிடிக்குமா? பிடிக்காதா?_ பகுதி 1



யாருக்கெல்லாம் சனிபகவானை பிடிக்காது? கை தூக்குங்க என்றால் இப்பொழுது நானும் எழுத்துக்களை பதிப்பிக்க முடியாது :)

நம்ம எல்லாருக்குமே சனி என்றால் அலர்ஜிதான்... ஆனால் நம் ஒவ்வொருவரோடும் கலந்து விட்ட அவரை எப்படி பிடிக்க இயலும்? அதெப்படி எனக்கு ஏழரை முடிஞ்சிடுச்சே... கண்ட சனி முடிஞ்சிடுச்சே... ஜென்ம சனி முடிஞ்சிடுச்சே... ன்னாலும் அவர் தன்வேகத்தை குறைத்துக்கொண்டாரே தவிர உன்னைவிட்டு அகலவில்லை... அகலவும் மாட்டார்... அவர் ஒருவேளை அகலும் சமயத்தில் நாம் உடலாலும், உயிராலும் பிணைக்கப்பட்டிருக்க மாட்டோம்.

எந்த ஜாதகனுக்கும் அவரே ஆயுள் காரகன்

அவரில்லாத நிலை, நீயும் இல்லாததற்குச் சமம். அவரை எப்படியறிலாம்? உன் கண்களை சிறிது நேரம் மூடியிருந்தாலே அவர் முன்னாலிருப்பார்... அவர் இருளுக்குரியவர்... ஆம் கருமையின் வண்ணம் அவர்தானே.

மகரத்திற்கும், கும்பத்திற்கும் அதிபதியாக இருந்தும், தன் ராசிக்கூட்டத்தை சேர்ந்தவராகிலும் நீதி பரிபாலனையில் எப்பக்கமும் சாயாத சாயாவின் மகன்.. சாயா சூரியனின் இரண்டாவது மனைவி... முதல் மனைவியின் நகல் அவள்...

ஆம் சூரியனின் புத்திரனே சனி, அதனால் தான் அவன் சனிபகவான்.

சில கதைகள் கரடியாக இருப்பதுண்டு... ஆனால் கிரகங்கள் பற்றிய கதைகள் தன் கதைகளோடு, கிரகங்களின் தன்மைகளை விவரணை செய்யும்... கதைகளை அனர்த்தம் செய்தலாகாது... 2011 அல்ல 3011 ஆனாலும் சில விசயங்களும், உண்மைகளும் மாற்றமில்லாத தன்மை கொண்டது. தமிழர்களின் வாழ்க்கை முறைகளோடும், நம் முன்னோர்களோடும் சித்தர்கள் என்றுமே கலந்திருந்திருக்கின்றனர்... அவர்கள் செய்திகளை அப்படியே சொல்லாது, குழுஊகுறியாக சொல்லப்பட்ட (சொல்வது ஒன்று... சொல்லவருவது ஒன்று... உள்ளர்த்தமாக இருப்பது ஒன்று) வார்த்தைகள்... ஆக பலமுறை யோசித்தாலன்றி உண்மை விளங்காது...

விசயத்தை அப்படியே கிரகித்தல், ஏற்கனவே இருக்கிற பத்தோடு, பதினொன்றாக சேகரித்தல், பிறகு ஆற அமர அலசுதல், அதில் ஒத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்... இவைகளே உண்மை அறிவுறுத்தும் வழிகள்... ஆனால் இப்போதைய நிலை,  

கோவணமே கட்டாதவன், அடுத்தவன் கோவணம் கிழிஞ்சிருக்குன்னு கிண்டல் செய்தானாம்கிற கதைதான் உலகில் நிகழ்கிறது.

எனக்கென்னமோ இந்த விசயங்கள் குறித்த பதிவு பதிவிட காரணியே சனிதான் என்று எனக்குப்படுகிறது... ஒருவனை வேலை வாங்குவதில் அவன் மன்னன்... அதுமட்டுமல்ல வேலை வழங்குவதிலும் மன்னன்.

நீ நல்ல வேலைக்காரன் என்ற பெயரை நீ சுமப்பாயானால் சனி உன் ஜாதகத்தில் சரி என்று அர்த்தம்... உனக்குக்கீழாக வேலைக்காரர்களிருந்தால் சனி உன் ஜாதகத்தில் அமோகம் என்று அர்த்தம். நீ மாடுபோல் பிறருக்காக உழைப்பதாக இருந்தால் கொஞ்சம் சனி பகவானுக்குரிய கடன் பாக்கி வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்.

ஒரு ஜாதகனுக்கு பரிட்சை தந்து பாடம் தருவதில் சனி கில்லாடி. முப்பது ஆண்டுக்காலம் ஒரு ஜாதகன் திசைமாறினாலும் சனி தடம் மாறுவதில்லை... மூன்று முப்பதுகள் அவன் தன்னைக்கொண்டு ஜாதனை ஆக்கிரமிப்பான். மூன்று முப்பதே 90 ஆண்டுகளாகி விடுவதல் அதற்குமேல் மனிதன் தாக்குபிடிக்க இயலாதிருக்கிறான்...திசா புத்திகளில் ஆரம்பமுள்ளோரே மூன்றாம் சுற்றைக்காண இயலும்.

ஒரு குழந்தையை அவன் வசீகரிப்பானால், அக்குறை  அதன் தகப்பனையே பாதிக்கும். என்ன ஒரு இளகிய மனம் பாருங்க :)

திருமண நிகழ்வுக்கு குருவைவிட அதிக காரணி சனிபகவான் தான். ஒவ்வொரு கணமும் உன்னை செம்மைபடுத்துவதில் சனிக்கு நிகர் சனியே... 12, 1, 2 ஆன ஏழரைகாலங்களில் அவர் ஆற்றலுக்கு இணைந்து போவதைதவிர வேறெதும் உன்னால் செய்ய இயலாது... ஒரு நதியில் ஆடும் நாணலைப்போல் அவரின் ஓட்டத்தில் உன்னை ஒப்படைப்பதே சரியான வழி.

ஆனால் நாமாகவே வேலியில் ஓடுகிற ஓணானை டவுசருக்குள் விட்டகதை தான் இப்பொழுதிருக்கிற வாழ்க்கை முறைகள்... சனிபகவானை விருந்து வைத்து அழைத்த கதையாக இருக்கிறது... அவரும்... இந்தா வாங்கிக்க... என்று நம்மை தாளித்துவிடுகிறார்...

எப்படி?






அடுத்த பதிவில் பார்க்கலாமே...
:)

2 comments:

Unknown said...

பதிவை தொடருங்க.....

Kalyan said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்