'>

Friday, October 7, 2011

மரணத்தை தியானியுங்கள்

எல்லாம் வேண்டும்

எனக்கு இந்த உலகத்துல உள்ள எல்லாமும் வேணும்
வெற்றியின் களிப்பில் அவன் எக்களித்த கணம்

எனக்கு நீ மட்டும் போதும் என்று மர்மப்புன்னகை செய்தது
மரணம்.

நான் ஆம்பளைடி !

நான் ஆம்பளைடி எவனுக்கும் தலை வணங்கமாட்டேன்.
அவனை போட்டு தள்ளாம விடமாட்டேன் என்றவன் போட்டு தள்ளினான்.

அரசு அவன் மேல் வழக்கு போட்டு உள்ளே தள்ளியது.
வழக்கும் தண்டனையும் முடிந்து வெளியே வருவதற்குள்
அவனும் -அவனுக்காக அவ்ன் மனைவியும்
கண்டவனுக்கும் தலை வணங்க வணங்க
அவனுக்குள்ளான ஆம்பளை அலியாகிப்போனான்.



கடல்
பிறவிப்பெருங்கடலில் விழுந்துவிட்டோம்
என்ற உள்ளுணர்வால் கை காலை உதைத்து அழுதது
குழந்தை


கண்

இவன் அவள் கண் பார்க்க
அவள் மண் பார்த்தாள்

இவனது எதிர்கால கனவுகளை புதைப்பதே
அதன் பொருள் என்பது இவனுக்கு
உறைப்பதற்குள்
காலம் கடந்துவிட்டது


வார்த்தைகள்

வார்த்தைகள் கூட மனிதர்கள் போலத்தான்.
சேருமிடம் அறிந்து சேர்ந்தால் கவிதையாகின்றன


மரணத்தை தியானியுங்கள்!

மனிதராய் பிறந்தோர் மரித்துத்தான் ஆகவேண்டும்
மனிதராய் பிறந்த பின்னும் மிருகமே போல் வாழ்ந்தாலும்
சகமனிதரை வேட்டையாடினாலும்
மரணத்துக்கு வேட்டையாகி
மரணத்தை செரித்துத்தான் ஆகவேண்டும்

நான் மனிதர்களின் மரணத்தை விட
அவர்களில் மனிதத்தின் மரிப்புக்குத்தான்
மருகுகிறேன். கலங்கிப்போகிறேன்.

மரணத்தை மறந்து போகாதவரை மட்டுமே
உயிர் வாழ்தலில் உயிர்ப்பிருக்கும்.

மரணத்தை மறந்து -உயிர்ப்பிழந்து
தம் இருப்பை தமக்கே அறிவித்துக்கொள்ளத்தான்
கொல்கிறார்கள் - தற்கொலை செய்கிறார்கள் போலும்.

தம் இருப்பை தாம் உணர மரணத்தை நினவு கூறல் ஒரு வழி
இருவிழி வாசல் திறந்து வைத்து
மரணத்தின் வரவை நோக்கியிருந்தால்
வாழ்வின் ஒவ்வொரு கணமும் உயிர்ப்பு பெறும்

மரணம் குறித்த நினைவு வாழ்க்கைவிளையாட்டில்
தடை செய்யப்படாத ஊக்கமருந்து.

மனிதர்கள் மனிதம் சிறக்க மண்ணுலகில்
வாழ்வாங்கு வாழ இன்னொரு வழி உண்டு

அது மரணத்தை தியானித்தல்
தன் மரணத்தை ..

மரணத்தை செரிப்பிக்கும் - புரிதலை விட
அதை மறப்பிக்கும் தவிப்பே
இவர் வாழ்வில் உயிர்ப்பை மறப்பித்துவிட்டது .

மரணத்தை நோக்கி நான் கையசைத்துக்கொண்டு இருக்கும் வரை
எவன் பாட்டுக்கோ நான் வாயசைக்கும் இழி நிலை இல்லை இனி ஒரு நாளும்


- 2011,செப்,19 ஆம் தேதி விடியல்

No comments: