'>

Saturday, November 19, 2011

பரிகாரங்கள் Vs நவீன பரிகாரங்கள்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கும் நம்ம வலைப்பூ/வலைதளங்களுக்கும் அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் டெவலப் செய்து பிரச்சாரம் செய்துவரும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும்.

வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

No comments: