'>

Saturday, June 14, 2008

முன்னுரை

முன்னுரை

நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் என்ற இந்த சிறு நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கதை அவர் சொன்னபடியே முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான். அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வந்த சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் அவை அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின.

பின்பு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.


2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். ஆசிரியர் தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவ , சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்து அது ஜோதிட பூமி மாத இதழில் முழுமையாக வெளிவந்தது ஒரு துணைக்கதை. பிரிண்டிங் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாய் புத்தகம் அச்சிட பெண்டாட்டி தாலியை அடகு வைக்கவேண்டிய‌அவசியமில்லாத காரணத்தாலும், சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ், தேஜா ஸ்வீட்ஸ், துர்கா ஸ்வீட்ஸ், ஆற்காடு ஸ்வீட்ஸ், துர்கா மோட்டார் டிரைவிங் ஸ்கூல் போன்ற விளம்பரதாரர்களின் பெரியமனதாலும் லோக்கல் மாதமிருமுறை நடத்திய அனுபவம் கை கொடுக்க, தினத்த‌தந்தியின் அபயக்கரம் ரொட்டி வேட்டைக்கு தள்ளாதிருக்க இந்த சிறு நூல் வெளிவருகிறது.

"விருந்துண்ணப் போகும்போது விருந்து குறித்த விளக்கம் ஏதுக்கு" என்பது தெலுங்கு

பழமொழி. எனவே குதியுங்கள் புதிய வெள்ளத்தில். அடித்து செல்லட்டும் ஜோதிடம் குறித்த தவறான நம்பிக்கைகள்.

தங்கள்,

சித்தூர்.எஸ்.முருகேசன்,
ஜோதிட ஆய்வாளர்

No comments: