'>

Monday, May 6, 2019

ஆறில் இருந்து அறுபது வரை ( முன்னுரை )


அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )

முன்னுரை


ஆறில் இருந்து அறுபது வரை என்ற பெயரை இந்த நூலுக்கு இட்ட போதே சுஜாதா கதைகளில் போல மனசுக்குள் கன்று குட்டி உதைத்தது. என்றாலும் தில்லு துரையாய் அறிவித்தாயிற்று.
பிறகு தான் இந்த தலைப்பு வாசகனுக்கு என்ன மாதிரி செய்தியை தந்திருக்கும் என்று யோசித்த போது உதறல் பிறந்தது. அதாவது ஒரு மனிதனுக்கு ஆறு முதல் அறுபது வயது வரை ஜோதிட ரீதியாக தேவைப்படக் கூடிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நூல் இது. இதை மட்டும் வாங்கி படித்து விட்டால் படித்தவற்றை பின்பற்றினால் வாழ்வில் எதிர்படக் கூடிய எல்லா சிக்கல்களையும் அசால்ட்டாய் தவிர்க்க முடியும் என்ற செய்தியை தந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
என் வரையில் நான் ஏதும் ஜோதிட கலையில் நிபுணனோ இன்னொன்றோ அல்ல. இன்றும் என் பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.
எல்லோரையும் போலவே நானும் ஜோதிட விதிகளை மனப்பாடம் செய்தவன் தான். சகட்டுமேனிக்கு அவற்றை அப்ளை செய்து பார்த்தவன் தான். ஆனால் அவ்வாறு அப்ளை செய்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிறர் போல லூஸ்ல விடாமஎன் மூளையில் பதிந்து கொண்டேன்.
இந்த பதிவுகள் தொடர தொடர ஜோதிட விதிகளில் முக்கியமானவை எவை முக்கியமற்றவை எவை என்பது தெளிவானது.
கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீய பலன்களும் அனைத்தும் நடந்து விடுவதில்லை. ஒரே கிரக ஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை. இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம் - கடவுள் கருணை – அப்பா, அம்மா நல்வினை - வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும் போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும் போது அது பல மடங்காகிறது.
(ரெசிப்டிவ் : ஏற்புத் தன்மையுடன் இருத்தல்; ரெபல் : பொங்கி எழுதல்).
ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. (நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்).
மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.
ஒரே ஜாதகத்தில் ஒரே லக்னத்தில் (அதாவது குத்து மதிப்பாக சொன்னால் இரண்டு மணி நேரத்தில்) பிறக்கும் எல்லா குழந்தைகளின் வாழ்வும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நிமிடத்துக்கு 4 குழந்தைகள் என்றால் 120 நிமிடங்களுக்கு 480 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அதில் ஒன்று தான் சூப்பர் ஸ்டாரோ சூப்பர் ஆக்டரோ ஆகிறது. மற்றவை? இவ்வளவு ஏன் இரட்டை குழந்தைகளின் வாழ்வும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.
இங்கு தான் பல்வேறு காரணிகள் நம் வாழ்வை பாதிப்பதை பிரபாவிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம் வீடு அதன் வாஸ்து நம் பெற்றோர் அவர் தம் வாழ்க்கை முறை அவர்களின் எண்ணங்கள் - நம் சூழல் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அவர்களில் நமக்கு நெருக்கமானவர்கள் – இறைநம்பிக்கை - அதன் ஆழம் - அல்லது நாத்திகம் இப்படி பல அம்சங்கள் வாழ்க்கையை மடை மாற்றுகின்றன.
என்னதான் ஆயிரம் விதிகளை வகுத்து வைத்திருந்தாலும் ஜோதிடத்தில் ஒரு இருண்மைத் தன்மை இருக்கிறது. எனவே ஜோதிடரானாலும் சரி ஜாதகர்களானாலும் சரி ஜோதிடவியலை ஒரு வித பணிவுடனேயே அணுக வேண்டியிருக்கிறது. வெறுமனே ஜோதிட விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்திரத்தனமாய் தட்டையாய் ஒரு வித ஆணவத்துடன் அணுகும் போது எல்லா விதிகளுமே கைவிட்டு விடுகின்றன.
சரி படைப்பின் மீதான மஹா விசுவாசத்துடன் அணுகி எதிர்காலத்தைக் கணிக்க முடிந்து விட்டால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்து விடப்போகிறது? பரிகாரம் என்று டைவர்ட் ஆகி கோழி போனதோடு குரலும் போன கதையாகி விடுகிறது வாழ்க்கை.
நானும் பரிகாரங்களை பரிந்துரைக்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நான் கூறும் பரிகாரங்கள் கிரகங்கள் தரவிருக்கும் கெடு பலனை நம் சமூக - குடும்ப வாழ்க்கையை பாதிக்காதபடி - ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்காதபடி நமக்கு நாமே நடத்திக் கொள்வதே.
உடைத்துச் சொன்னால் நம் ஜாதகம் நம்மை எப்படி வாழ அனுமதித்திருக்கிறதோ அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். படைப்புக்கு எதிராய் செயலாற்றுபவனுக்கு இடையில் ஏற்படுவதே பயம். படைப்பு வகுத்த விதிக்கிணங்க நெகிழ்வு தன்மையோடு வாழ்பவன் அஞ்சத் தேவையில்லை. அவனுக்கு ஞானம் கிடைத்து விடுகிறது அல்லது ஞானம் கிட்டிவிட்ட காரணத்தாலேயே அவன் நெகிழ்வு தன்மையுடன் ஆற்றோடு போகிறான்.
ஜோதிட விதிகள் பரிகாரங்கள் எல்லாம் சரியே (நான் கூறும் லாஜிக்கல் ரெமிடீஸ்). ஆனால் ஓஷோ சொல்வதையும் நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
“The life doesn’t cares your preparations“
என்னைப் பொருத்தவரை நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும்; அறிவுக்கும் உணர்வுக்கும்; உணர்வுக்கும் -உள்ளுணர்வுக்கும் வித்தியாசம் புரிந்தவன். என்னை அறியாது என்னில் மூடநம்பிக்கைகள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் பெரியாரைக் காப்பாக கொண்டவன்.
என் காதுக்கும் - கண்ணுக்கும் வருவனவற்றை தவறாது பரிசீலிப்பவன். ஆனால் என் அனுபவம் சொல்வதை மட்டுமே ஏற்பவன். 1990 மார்ச் மாதம் ப்ராக்டிஸ் துவங்கி 2009 வரையிலும் மக்களை நேரில் சந்தித்து முதலில் கடந்த காலத்தைக் கணித்துச் சொல்லி அது டாலி ஆனால் மட்டுமே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி வந்த நிலையிலும் பிறகு ஆன்லைன் ஜோதிட ஆலோசனையை வழங்கி வரும் நிலையிலும் நான் உணர்ந்து கொண்ட சங்கதி ஒன்றே.
நவகிரகங்கள் கடவுளின் மந்திரி சபையில் மந்திரிகளை போன்றவையாகும். பிரதமர் மந்திரிகளுக்கு இலாகா பிரித்துக் கொடுப்பது போல் கடவுள் பூமியில் உள்ள எல்லா விஷயத்தையும் 9 ஆக பிரித்து, அவற்றின் மீதான அதிகாரத்தை ஒவ்வொரு கிரகத்துக்கும் கொடுத்துள்ளார். ஒரு கிரகம் தங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அதன் இலாகாவில் உங்களை அடித்துக் கொள்ள ஆளிருக்காது. அதே கிரகம் கெட்டிருந்தால் அதன் இலாகாவில் நாயடிதான். இது ஜோதிடவியலின் ஸ்தூல சாரம்.
ஆனால் ஒரு மந்திரிக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை இருந்தாலும் பிரதமர் உங்களுக்கு உதவ முனைந்து விட்டால் மந்திரியால் என்ன செய்ய முடியும்?. ஆனால் கடவுள் என்ற பிரதமர், உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால் அவரது ஒரே நோக்கம் வெறுங்காவல் கடுங்காவல்” தண்டனைகளை ஒரே டெர்மில் அனுபவிக்கச் செய்து விரைவில் விடுதலை செய்வதே.
அவர் உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால், எவனோ எனக்கு சூனியம் வைத்து விட்டான் என்று பதறிப் போகும் அளவுக்கு வாழ்க்கை நிலை மாறி விடும். காரணம், இறைவனின் கேரக்டர் அப்படி. இறைவனின் கேரக்டரைப் புரிந்து கொண்டவர் யாரும் உலக வாழ்வை பிரதானமாக கருதும் யாரும் முழு நாத்திகர்களாக மாறிவிடுவார்கள்.
ஆனால் உலக வாழ்வு ஒரு விசித்திரமான சூதாட்டம். இங்கு அனைவரும் தோற்றுத்தான் போகப் போகிறோம். அதிகம் வென்றவன் அதிகமாய் இழப்பான். குறைவாய் வென்றவன் குறைவாய் இழப்பான். நான் மரணத்தைச் சொல்லுகிறேன்.
எந்த மந்திரி நமக்கு ஃபேவர் செய்வான் என்று தலைமைச் செயலகத்தைச் சுற்றி அலைவது ஒரு முறை. நேரடியாக பிரதமரைச் சந்தித்து உதவி கோருவது ஒரு முறை. மந்திரி ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களைக் கூட்டும். பிரதமர் ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை அழித்து பிறவாமையைத் தரும்.
இங்கு அனைத்து உயிர்களும் முக்திக்கு தகுதியானவையே. முக்தி என்றால் பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபடுவது. (இந்து மதம் கூறும் முப்பது முக்கோடி தேவர்களும் இப்படி விடுதலை பெற்றவர்களே என்றும் ஒரு கருத்து உண்டு).
விடுதலைக்கு இருக்கும் ஒரே வழி, நம் பூர்வ கருமங்களை அனுபவித்து தீர்த்து விடுவதே. இதை சாத்தியப்படுத்தும் வாழ்வைத்தான் நாம் வேண்டி விரும்பி கேட்டு பெற்று வந்திருக்கிறோம். அடுத்து வரும் கவிதையின் ஒரே ஒரு பத்தி இதை பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்கிறது. முக்தியை சாத்தியப்படுத்தும் வாழ்வைத் தரக்கூடிய கிரக ஸ்திதிக்காக பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து இந்த பிறவியை எடுத்திருக்கிறோம். ஆக உங்கள் ஜாதகம் உங்கள் தேர்வு தான். உங்கள் ஜாதகப்படி விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தால் பிறவாமை மட்டுமல்ல இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக அமைந்து விடும். (கவனிக்க - சுகமாக அல்ல சுமுகமாக).

// நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக் கொடுத்த
கதைக்குத் தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம் //
இப்போது கவிதையை படியுங்கள். சினிமா கிசு கிசு கணக்காய் தவ்விசென்றால் புண்ணியமில்லை. இந்த கவிதையின் ஒவ்வொரு பத்தியும் என் இருபதாண்டு கால தவ வாழ்வின் பலன். உயிரை பணயம் வைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம். கவிதையை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.
நீங்கள் அறிந்து கொள்ள அணுக விரும்புவது இறைவனையா? நவகிரகங்களையா?
இந்த நூலின் மூலம் நவகிரகங்களை அவற்றின் பாதிப்புகளை தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனால் இவையாவும் அந்த கால கணக்கு நோட்டில் வலது பக்கம் பெரிய மார்ஜினில் செய்யும் ரஃப் ஒர்க் போன்றவை. 2 ஜி வழக்கில் 1.76 பக்கத்தில் சங்கிகளும் குடுமிகளும் போட்டுக் கொண்டே போன பூஜ்ஜியங்கள் மாதிரி. சிபிஐ நீதிமன்றம் 1.76 என்ற எண்களை ரத்து செய்து விட்டது. இதன் விளைவு? குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை.
இறைவன் நினைத்தால் நீங்கள் வாய்தா கேட்டு அலையாமல் இருந்தால் குறுகிய காலத்திலேயே விடுதலை நிச்சயம். ஆனால் கிரகங்கள் பரிகாரங்கள் (யாகம் - ஹோமம் இத்யாதி) வாய்தாக்களை வாரி வழங்கலாம். ஆனால் மெரீனாவில் புதைத்து விடும். புதைத்ததை தோண்டி எடுத்து குற்றவாளி என்று அசிங்கப்படுத்தும்.
கவிதைக்கு போயிரலாமா?

No comments: