காந்தி என்றதும் கரன்சியில் சிரிக்கிறாரே அவரா
என்பவனுக்கும்
கண்ணன் என்றதும் செமை கில்மா பார்ட்டியில்லை
என்பவனுக்கும்
இடையில் இல்லை ஒரு வித்யாசம்.
காந்தி எப்படி கரன்சி நோட்டில் கொச்சைப்படுத்தப்பட்டாரோ
அப்படியே கண்ணனும் ..கோவில்களில்..
மனித மனம் ரொம்ப விசித்திரமானது.
அதன் வாசல் குட்டையெனில்
அதற்குள் நுழையும் பிம்பங்களும்
குறுகி விடுகின்றன.
கண்ணன் அவனை சுற்றி
எத்தனை பொய்க்கதைகள்
வட்டமிட்டாலும்
அவன் கீதை எந்த அளவுக்கு
மலினப்படுத்தப்பட்டு விட்டாலும்
அவனும் -அதுவும் அவற்றிலிருந்து
பிரிந்தே - உயர்ந்தே நிற்பது
அவன் அதிர்வுகள் இன்னும் இங்கு மிச்சமிருப்பதை
உணர்த்துகிறது.
கம்பீர கலைஞன் ஒப்பனை கலைக்கப்பட்டும்
கம்பீரமாகவே இருப்பது போல
கண்ணனிடம் இருந்து தெய்வத்தன்மையும்
அளப்பரிய சக்திகளும் அப்புறப்படுத்தப்பட்டாலும்
அவன் உயரம் குறைய மறுக்கிறது.
எப்போது -எங்கே -யாரிடம் -எதை எடுக்கவேண்டும்
என்பதை போலவே
எப்போது -எங்கே -யாருக்கு -எதை கொடுக்கவேண்டும்
என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தது
எனக்கு அதிர்ச்சியை தரவில்லை.
அவனிலான முதிர்ச்சி
தரிசனம் தருகிறது.
அவன் கீதை ஒரு சாதனையாளனின் போதனை
சாதிக்க முடியாதவர்கள்
போதிக்காத விஷயம் தான் எது?
ஆயர்குல பெண்ணின் வெண்ணையை புசித்து
நான் பெண் வாசம் படாதவன் எனில்
உபவாசம் இருந்தது உண்மை எனில்
வழி விடு என்று அவன் கேட்க நதி நகர்ந்து கொள்கிறது.
காரணம் எதுவும் அவனுள் பிரவேசித்து
அப்பால் சென்று விட்டதே.
எதுவும் அவன் ஆளுமையை மாசுப்படுத்த முடியவில்லை
அவன் வாழ்ந்த வாழ்க்கையும் தான்.
அம்னெஸ்டி, -இன்டர் நேஷ்னல் மீடியா- மனித உரிமைகள்
சமூக வலைகள்
எல்லாம் இருக்கும் இக்காலத்திலும்
ஒரு அரசை எதிர்ப்பது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கிறது
இவை எதுவும் இல்லாத காலத்தில்
மக்களை திரட்டி மன்னனை மாற்றுதல் அதிமனித செயல்.
கண்ணன் ஒருவனோ - பலரின் பன்முக பண்புகளால்
திரட்டப்பட்ட கற்பனையோ
எதுவாக இருந்தாலும்
அவன் குறித்த நினைவுகள்
மதுவாக போதை தருகின்றன.
No comments:
Post a Comment